Osai Chella's Facebook Links

பெண்ணியம், ஆணியம், முலைகள், குட்டி ரேவதி!


சமீபத்தில் தோழி கவிஞர் தமிழ் நதி அவர்கள் குட்டி ரேவதியை பேட்டியெடுத்ததை படிக்க நேர்ந்தது! பொதுவாக இங்கு பெண்ணியம் பற்றி பேசுவது ஐயப்ப சாமி சீசன் மாதிரி ஒரு ஃபேசன் கூட ஆகிவிட்டது. புதிய மானுட சிந்தனைகள் வலம் வருவது தடைப்பட்டு ஆண் வெறுப்பு மட்டுமே பெரும்பாலும் உமிழப்படும் காலகட்டத்தில் ஆணியமும் பேசவேண்டியதே என்பது எனது கருத்து. மேற்கண்ட நேர்காணலுக்கு நான் எழுதிய பதிலாடல் ....

பெண்ணியம் என்பதே ஆண்களை எதிர்ப்பது, ஆண்செய்வதை காப்பியடித்தல், ஆண்செய்வதை நானும் செய்யமுடியும் என்று ஆண்செய்வதை ஏதோ ஒரு மிகப்பெரிய விடயமாக நினைத்து தாங்களும் செய்வதில் ... ம் ம்.. எனக்கு நிச்சயம் பரிதாபமே உள்ளது.. ஒரு ஆணியவாதியாக!

கொஞ்சம் காட்டமாகவே கேட்கிறேன்.. ஆண்கள் "முலைகள்" என்று எழுதியதால், அதை வெகு சன ஊடகங்களில் வியாபாரமாக்குவதால் பெண்களும் பதிலடி கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தால்.. நன்றாக யோசியுங்கள்.. ஆண்குறி அல்லது வழக்கில் உள்ள *** என்றல்லவா பாட்டெழுதியிருக்க வேண்டும் குட்டி ரேவதி?

இவர் வாதம் எப்படியிருக்கிறதென்றால் .. ஒரு முறை ஒரு ரஷ்யரும் அமெரிக்கரும் சந்தித்திக் கொண்ட போது ( பனிப்போர் காலங்களில் ) அமெரிக்கர் தங்களது எழுத்துச்சுதந்திரத்தைப் பற்றி இவ்வாறு பெருமைப்பட்டுக்கொண்டாராம் .. "நாங்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி ரொனால்ட் ரீகன் ஒழிக" என்று கூட கோசம் போடுவோம். அதற்கு ரஷ்யர் பதிலிறுத்தாராம்.. இதென்ன பெரிய விசயம்.. நான் கூடத்தான் கிரெம்ளின் மாளிகை முன்னின்று "ரொனால்ட் ரீகன் ஒழிக" என்று கோசம் போட முடியும் என்று!. .. புரிகிறதா தோழி!

அன்புடன்..
ஓசை செல்லா

9 பின்னூட்டங்கள்:

PeerMadurai said...

//பெண்களும் பதிலடி கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தால்.. நன்றாக யோசியுங்கள்.. ஆண்குறி அல்லது வழக்கில் உள்ள *** என்றல்லவா பாட்டெழுதியிருக்க வேண்டும் குட்டி ரேவதி?//

சரியாக தான் கேட்டுள்ளீர்கள், செல்லா.

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

தமிழச்சி said...

நல்ல கேள்வி செல்லா,


இன்றுதான் மொத்த பதிவுகளையும் படித்தேன். நேரமின்மையால் சில நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை. எனக்கும் இதே யோசனை தோன்றியதுண்டு. தமிழ்நாட்டில் பெண்ணீயம் பேசுபவர்கள் யோனியையும், முலையையும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இதையே பேசிக் கொண்டிருந்தால் இதுதான் பெண்ணீயமா என்று கேட்கிறேன்.

எந்த பெண்ணியவாதியாவது பகுத்தறிவு சார்ந்து சமூகம் சார்ந்த செயல்களை முன்னெடுத்திருக்கிறார்களா? சும்மா முலை, யோனி குறித்து கவிதை வைத்து பெண்ணியத்தீர்வை தேடிக் கொண்டிருக்கும் திருட்டு முண்டைகள் இருக்கும் வரையில் பெண்ணீயம் எல்லாம் வெத்துவேட்டு.

ஏதோ இன்று எனக்கும் ஒரு பதிவை போட உன்னுடைய எழுத்து தூண்டியிருக்கிறது.

OSAI Chella said...

// திருட்டு முண்டைகள் //
தோழி இந்த வார்த்தை மிகவும் கொடுமையானது ! எனவே இதை தாங்கள் இனிமேல் எவ்விடத்திலும் உபயோகிப்பதை தவிருங்கள்! - அன்புடன் ஓசை செல்லா

தேன்மொழி said...

வணக்கம் தோழர் ....... மற்றும் தமிழச்சி ,
வயலுக்கு இறங்கி தண்ணீர் பாய்ச்சாதவர்கள் , வரப்பில் நிற்று நண்டுக்கு நாக்கு நீளம் என்பது போல் இருக்கிறது . குட்டி ரேவதி யார் ..... இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத கலை கவிதை போராளி . அவர்கள் எழுதிய எல்லா தொகுப்புகளும் நீங்கள் வாசித்தாலும் புரிந்திருக்குமோ என்னவோ உங்களுக்கு . பெண்ணியம் , ஆணியம் , எல்லாம் மண்ணாங்கட்டிகளை விட கீளானதுதான். இவை பற்றிப் பேச நீங்கள் தமிழுக்கு தமிழ் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள் . உரைநடை நாகரீகம் , பேச்சு நாகரீகம் அற்ற உங்களால் குட்டி ரேவதியின் கவிதைகளுக்கு அபத்தமான வார்த்தைகளில் விமர்சனம் எழுதக்கூட தகுதி இல்லை என்று தான் உணர்கிறேன் . கவிதைகளும் கவிஜனும் காலத்தின் பின்புலக் கண்ணாடிகள் . விமர்சனங்களால் கவிதைகள் மீது கல்லேரிவதாய் நினைத்து உங்கள் மீதே உமிழ்ந்து கொள்ளாதீர்கள் . கவிதைகளை படியுங்கள் , குட்டி ரேவதி தமிழ் கவிதைகளை புதிய தளத்திற்கு கொண்டுபோனதும் தெரியும் . நீங்கள் சலித்துக்கொள்கிற பெண்ணியம் , ஆணியம் எல்லாம் புறந்தள்ளியவர் எனப் புரியும் . கூச்சமாக இருக்கிறது நீங்கள் எழுதிய ............ வார்த்தைகளை விட , உங்களை விட அடக்கமான எழுத்தாளர் தான் குட்டி ரேவதி

- தேன்மொழி தாஸ்

OSAI Chella said...

தோழி தேன்மொழி,
நீங்கள் ஒரு பிரபல பாடலாசிரியை, கதாசிரியர், இணைஇயக்குனர், வசனகர்த்தா என்று எனக்கு தங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது! எனவே கொஞ்சம் அடக்கமாகவே பதிலளிக்கிறேன்.

முதலில் தோழி தமிழச்சி பற்றி நீங்களும் அறிந்துகொள்ளுதல் காலத்தின் தேவை! முடிந்தால் அவசியம் குட்டி ரேவதியையும் அவரையும் சந்திக்கவைக்கவேண்டும். தனே தமிழ்கற்று பல ஆயிரம் பெரியார் சிந்தனைகளை கட்டுரைகளை இணையத்தில் தனியொரு ஆளாக நின்று பரப்பி வருபவர். இப்போது கூட இந்த வார்த்தையை அவருக்கு யாரோ தவறாக கற்பித்திருக்கிறார்கள் என்று தனிமடல் அனுப்பி நீக்கச்சொன்னார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த மாதிரி வார்த்தைகளை அவ்ர்மீதே இணையத்தில் சரளமாகப் பலரும் பிரயோகித்தபோதுதான் அவற்றைப் பற்றி அறிந்துகொண்டவர். அவ்வளவு கடுமையான சூழலிலும் தன்கருத்தை தயங்காமல் தைரியமாக எழுதுபவர். எனவே இங்கே புரிதல்கள்தான் காலத்தின் தேவையே.

சரி இப்போ விசயத்துக்கு வர்ரேன். ஒரு படைப்பாளியின் கருத்தை, அதுவும் ஒரு பேட்டியில் அவர்கொடுத்த விசயத்தை பற்றி விமர்சிக்க அவரது அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டும் என்று சொல்வது எந்த அளவு சாத்தியமானது என்று தெரியவில்லை!!

==== அதுசரி நாங்கள் குட்டிரேவதியின் பேட்டி வந்த இடுகையில் தொடர்ந்து நடத்திய உரையாடல் இங்கே வெளியிடப்படுகிறது!

=========

12:51 AM
Blogger தமிழ்நதி said...

ஓசை செல்லா,

பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பதோ அல்லது அவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே பிரதி செய்வதோ அல்ல என்பதை நீங்களும் நானும் அறிவோம். நமது சகவுயிர்களான ஆண்களை எதற்காக எதிர்க்கவேண்டும்? அவர்களில் ஆணாதிக்க மனோபாவம் உள்ளவர்களின் செயற்பாடுகளைத்தான் எதிர்க்கிறோம். எதிர்ப்பும் இந்தச் சமூகத்தில் எந்தளவு எடுபடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

"ஆண்கள் 'முலைகள்'என்று எழுதினார்கள்; அதற்குப் பதிலடி கொடுக்கவே நானும் அந்தச் சொல்லைப் பிரயோகிக்கிறேன்"என்று குட்டி ரேவதி எங்காவது சொல்லியியிருக்கிறாரா? அவரது கவிதையில் அந்தச் சொல் இடம்பெற்றதும் அதைத் தலைப்பாகவே வைத்ததும் அப்படியென்ன கலாச்சாரச் சீரழிவை உண்டாக்கிவிட்டது? எதற்கு இத்தனை கூச்சல் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அது ஒரு சொல். அவசியப்பட்ட இடத்தில் அதை அவர் எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். ஒரு சொல்லினால் இந்தச் சமுதாயம் கற்பிழந்துபோனதா? நகைப்பாக இருக்கிறது. பழந்தமிழிலக்கியங்களிலும் அந்தச் சொல் இடம்பெற்றிருக்கிறது. அதற்காக நாம் அவற்றை ஒதுக்கிவிட்டோமா?

ஆண்கள் எழுதினார்கள் என்பதற்காக வலிந்து 'முலைகள்'என்ற சொல் எழுதப்படவில்லை என்பதே நான் விளங்கிக்கொண்டது.

தவிர, குட்டி ரேவதி பாட்டு எழுதுவதில்லை ஓசை செல்லா! நான் அறிந்தவரையில் கவிதைகளும் கட்டுரைகளுந்தான் எழுதியிருக்கிறார்.
8:22 AM
Blogger OSAI Chella said...

// தமிழ்நதி:இதே சொல்லை ஒரு ஆண் எழுதியிருந்தால்…?

குட்டி ரேவதி:எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் வெகுஜன இதழ்களில் பெண்களுடைய முலைகள் மிகவும் கவர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி யாரும் சர்ச்சை எழுப்பத் தயாராக இல்லை. ஆண் எதைச் செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.//

இப்போ புரியுதா தோழர்! நான் ஏன் இதை வம்புக்கிழுத்தேனென்று!

(தமிழில் வரும் ஒரு விளம்பரம் மாதிரி இருக்கா!! ;-).(இப்போ புரியுதா நான் ஏன் இதை வாங்கினேன்னு!)

பிற்குறிப்பு: அது சரி, சீரியசா எடுத்துக்காதீங்க! அவரது ஆளுமை எனக்கு பிடிக்கும். கவிதைகளும்தான்! கவிதை பற்றிய கருத்தாடல்கள் ஆண்களே அப்படித்தான் ரகம் மாதிரி இருந்ததால் தான் இப்படி சீண்டுகிறேன். மேலும் அவரது செய்திகள் மற்றும் உங்கள் பேட்டி மறுபடியும் வாசிக்கப்படட்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம்! ஹா ஹா!

தமிழச்சி said...

வணக்கம் தேன்மொழி தாஸ்,

மரியாதையோடு பதில் கொடுத்தால் நானும் மரியாதையோடு வார்த்தைகளை கையாளுவேன்.

இன்னாரைக் சுட்டிக்காட்டி, அவளை விட இவள் மேல்; இவளை விட அவள் மேல் என்ற ஒப்பிடுகள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் நீங்கள் இயங்கும் தளம் வேறு. நான் இயங்கும் தளம் வேறு. இரண்டையும் இணைத்துவிட முடியாது.

இனி உங்களுடைய பின்னூட்டத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி எதிர்வினை செய்வது எனக்கு நல்லதென்று தோன்றுவதால் இனி
விஷயத்திற்கு......

///வயலுக்கு இறங்கி தண்ணீர் பாய்ச்சாதவர்கள் இ வரப்பில் நிற்று நண்டுக்கு நாக்கு நீளம் என்பது போல் இருக்கிறது.///

பயிர் நிலம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் கையாளப்படுகிறது. நான் பார்த்ததெல்லாம் ஹெக்டர் நிலத்தில் ஒத்தை ஆள் நிற்பான். மஷின் தானாக தண்ணீர் பாய்ச்சும். களையெடுக்கும், நாத்து நடும், அறுவடை செய்யும். அதே ஒற்றை ஆள் அங்கு நிற்பான்.

எனக்கு பயிர் நிலத்தை பார்த்தால் விளைச்சலை பார்க்கத் தோன்றும். அதில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கத்தினரின் கூலிகளை ஆராய்ச்சி செய்யத் தோன்றும். ஆளும் வர்க்கத்தினரின் ஆதிக்க உணர்வுகளை விமர்சிக்கத் தோன்றுமே தவீர நண்டு, நாக்கு எல்லாம் சிந்தனைக்கு வராது.

அதனால் சிந்தனை என்பது உங்களைப் போல் எல்லோருக்கும் பழமொழியில் போய் முடியும் என்று நினைக்காதீர்கள்.

///குட்டி ரேவதி யார் ..... இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத கலை கவிதை போராளி.///

"கலை கவிதை போராளி" நல்லாருக்கு. ஆனால் கவிதையால் எதை சாதித்தார்? எதை போராளி என்கிறீர்கள்? போராளித்தனம் எது என்று நீங்கள் வரையறுத்திருக்கிறீர்கள்? குறிப்பாக பெண்ணீய போராளிகள்! எப்படி செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

"கலை கவிதை போராளி"களை விட, "களப் போராளி"களை நான் மதிக்கிறேன். மரியாதை செய்கிறேன். மற்றதெல்லாம் எனக்கு உருப்படாத போண்டிகள் தான் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

///பெண்ணியம், ஆணியம், எல்லாம் மண்ணாங்கட்டிகளை விட கீளானதுதான். இவை பற்றிப் பேச நீங்கள் தமிழுக்கு தமிழ் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள்.///

பிரான்ஸ் நாட்டில், "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பா" என்ற அமைப்பை வைத்திருக்கிறேன். இது அரசாங்கம் அனுமதி பெற்றது. இதில் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். தமிழ்மக்களிடம் இவ்வமைப்பின் மூலம் பகுத்தறிவு பிரச்சாரத்தை கொண்டு செல்ல முற்படுகிறேன். பெண்ணீயம் குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2007- இல் பாரீசில் நகரில் நடந்த விநாயகர் தேர்திருவிழாவில் பெண்கள் தீச்சட்டி எடுத்துப் போவதும், அலகு குத்திக் கொள்வதும் மற்றும் மூடபழக்க வழக்கங்களுக்கு எதிராக களம் இறங்கினோம். 2008 இல் தமிழ் பெண்களின் அறியாமை தீச்சட்டி தூக்கும் முட்டாள் தனத்தில் இருக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்து சடங்குகளை தடை செய்திருக்கிறேன். மற்றும் செயல்பாடுகள் இனியும் தொடரும்.....

தந்தை பெரியார் நூல்கள், கருத்துக்களை 5- வருடங்களாக இணையத்தில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறேன். பெரியாரியல் ஆய்வு செய்யும் பணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றும் பிரான்ஸ் நாட்டில் ப்ரெஞ்ச் பெண்கள் அமைப்பில் உறுப்பினராக செயல்பாடுகள் தொடர்கிறது. அது குறித்து நம் சமூகத்திற்கு தேவையில்லை.

இருமுறை தமிழர்கள் நடத்திய கூட்டத்தில் பேச சென்றிருக்கிறேன். அறிமுகப்படுத்தும் போதே புதுமைப்பெண், புரட்சி பெண் என்று புகழ்ந்தார்கள். அடைமொழிகள் எனக்கு தேவையில்லை என்று கடுமையான ஆட்சேபித்து எனது கருத்தை பேசினேன். இன்னொரு கூட்டத்தில் "பெண்ணுரிமை போற்றப்படுகிறதா, பொய்யாகிப் போகிறதா" என்ற தலைப்பில் 6 பெண்கள் கலந்து கொண்டோம். நான் பெண்ணுரிமை பொய்யாகிப் போகிறது என்ற தலைப்பில் பேசினேன். அப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதில் மேடையில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காத இடத்தில் நான் பேச விரும்பவில்லை என்று மைக்கை கொடுத்து விட்டதோடு உருப்படாதவர்கள் நடத்தும் இலக்கியக்கூட்டங்களில் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அறிந்து அன்றிலிருந்து எந்த இலக்கியக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதிலும், இணையம் வழியாக என்னுடைய கருத்துக்களையும், தந்தை பெரியார் நூல்களையும் தரவேற்றம் செய்யும் பணியில் இருக்கிறேன்.

என் இணைய பக்கத்தின் இணைப்புகள் :

http://tamizachi.com/

http://tamizachiyin-periyar.com/


///உரைநடை நாகரீகம், பேச்சு நாகரீகம் அற்ற உங்களால் குட்டி ரேவதியின் கவிதைகளுக்கு அபத்தமான வார்த்தைகளில் விமர்சனம் எழுதக்கூட தகுதி இல்லை என்று தான் உணர்கிறேன்.///

நீங்கள் என்னைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் உணர்வது மட்டுமே உண்மையானது என்று நினைத்தால் அந்த நினைப்பை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னொன்று எனக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதையோ, புகழுவதையோ கடுமையாக ஆட்சேபிக்கும் பழக்கம் எனக்கிருக்கிறது. "இனமான தாரகை" இணையத்தில் கொடுத்த பட்டத்திற்கு என் எதிர்வினையை படித்து பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

அடுத்து பேச்சு நாகரீகம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அதையெல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் நிலையில் என்னுடைய படிப்பு இல்லை. ஏனெனில் எப்படி பேசுவது தொழில் துறையில் என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

நாகரீகம் என்பது நாகரீகமாக நடந்துக் கொள்பவர்களிடம் மட்டும் தான் என்னுடைய நாகரீகமும் இருக்கும். எல்லை மீறினால் எங்கு போய் முடியும் என்பதும் என்னுடன் மோதுபவர்களுக்கு தெரியும்.

தேவையில்லாமல் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகள் நடத்தையை குறித்து நான் விமர்சிப்பதில்லை. ஆனால் அதே நடத்தையை பெண்ணீயத்திற்குள் திணித்துக் கொண்டு பெண்ணீயவாதிகளாக அடையாளப்படுத்த முற்பட்டால் அங்கே சக பெண்ணாக என்னுடைய எதிர்வினை இருக்கும். முடிந்தால் எதிர்வினையில் உங்களுடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு மரியாதை குறைவாக பேசுவதாக திசை மாற்றம் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?

///கவிதைகளும் கவிஜனும் காலத்தின் பின்புலக் கண்ணாடிகள். விமர்சனங்களால் கவிதைகள் மீது கல்லேரிவதாய் நினைத்து உங்கள் மீதே உமிழ்ந்து கொள்ளாதீர்கள்.///

கவிதை பின்புலக் கண்ணாடியாகவோ வேறு என்னவாகவோ கடந்துவிட்டு போகட்டும். அதனால் மக்களுக்கு குறிப்பாக அடிதட்ட மக்களின் வாழ்க்கை தரத்திற்கு என்ன தீர்வு வைத்துவிட முடிகிறது என்பதே எமது கேள்வி. மக்களுக்கு புண்ணியப்படாத உருப்படாத எந்த கலையை கண்டாலும் என் மீது காரித் துப்பிக் கொள்ள மாட்டேன். அதன் மீதுதான் காழி உமிழ்வேன்.

///கவிதைகளை படியுங்கள்///

கவிதைகள் மனிதனை போலித்தன்மையில் வைத்துவிடுகிறது என்பது எனது நம்பிக்கை. கவிதைகளில் போதை இருக்கிறது. யாதார்த்தம் இல்லை. எழுச்சி கவிதைளில் ஆர்வம் உண்டு. மற்றபடி யோனி, முல்லை, முல்லை போன்றவைகளை படித்தே தீரவேண்டும் என்பதில்லையே தோழி.

///குட்டி ரேவதி தமிழ் கவிதைகளை புதிய தளத்திற்கு கொண்டுபோனதும் தெரியும்.///

நீங்கள் எந்த தளத்திற்காவது கொண்டு போங்கள். அதனால் பெண்ணீயத்திற்கு என்ன தீர்வு என்பதையே அறிய விரும்புகிறேன்.

///நீங்கள் சலித்துக்கொள்கிற பெண்ணியம் இ ஆணியம் எல்லாம் புறந்தள்ளியவர் எனப் புரியும்.///

இதையெல்லாம் புறந்தள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதையெல்லாம் புந்தள்ளும் மனநிலை அவருக்கு இருக்கிறது என்றால் முலை என்ற வார்த்தையால் ஏற்பட்ட புறக்கணிப்பு அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக தமிழ்நதி பேட்டியில் சொல்லி இருக்கிறாரே! அப்படியானால் அவருக்கு மனமென்பது இன்னும் இருக்கிறதல்லவா? அந்த மனப்பக்குவத்தை உடையவரால் நிச்சயம் எதையும் புறம்தள்ள முடியாது.

///கூச்சமாக இருக்கிறது நீங்கள் எழுதிய ............ வார்த்தைகளை விட///

என்ன வார்த்தையை கூச்சம் என்கிறீர்கள். இன்னும் வெளிப்படையாக பேசினால் என்நிலைப்பாட்டை விளக்க இலகுவாக இருக்கும்.

///உங்களை விட அடக்கமான எழுத்தாளர் தான் குட்டி ரேவதி///

நான் அடக்கமானவள் இல்லை. அடங்க மறுப்பவள். அடக்கமான பெயரை அவர் விரும்பினால் அதற்கு உரியவர் அவரே நானில்லை.

குழலி / Kuzhali said...

சபாஷ் தமிழச்சி, கலைப்போராளிகளை விட களப்போராளிகளையே மதிக்கிறேன் என்பதே மிகச்சரியானது...

ஷீ-நிசி said...

குட்டி ரேவதி அவர்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமாகவே படுகிறது!

Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு